டெல்லி: மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தலி நடைபெற்றது. இதில், 7 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக 4 இடங்களை கைப்பற்றி உள்ளது. லாலு கட்சி, சிவசேனா, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்துள்ளது.
குஜராத் தேர்தலுக்கு முன்னதாக, பீகார், ஹரியானா, உ.பி., ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த முக்கிய இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும்,. பல இடங்களில் மாநில கட்சிகள் பாஜகவுக்கு கடும் சவாலாக திகழ்ந்தன.
6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதன்படி, அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தரபிரதேசம்) மற்றும் முனுகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 5ந்தேதி நடைபெற்றது. அதன் முழுமையான முடிவுகள் நேற்று (6ந்தேதி) வெளியாகின. இந்த 7ல் நான்கை பாஜக கைப்பற்றி உள்ளது.
பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி, . ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரசுடன் கரம் கோர்த்துக்கொண்டு அங்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் மீண்டும் அரசு அமைத்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் 2 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றன. இதில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் தொகுதியையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது. இதற்கிடையில், பீகாரின் மொகாமா சட்டமன்ற தொகுதியை ராஷ்ட்ரிய ஜனதா தளம் (லாலு கட்சியான ஆர்ஜேடி) தக்க வைத்துக் கொண்டது.
உத்தரப் பிரதேசத்தின் கோலா கோகரன்நாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அரியானாவின் ஆதம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஷ்னோய் 16,606 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் பாஜகவின் சூர்யபன்ஷி சுராஜ் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தார். தற்போது அவரும் வெற்றி பெற்று விட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் அந்தேரி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சிவசேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் ருதுஜா லட்கே வெற்றி பெற்றார்.
தெலுங்கானாவின் முனுகோட் தொகுதியில் டிஆர்எஸ் கட்சியின் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.