சென்னை,
மிழகம் முழுவதும் ரேசன் அட்டையில் மேலும் 6 மாதம் உபயோகப்படும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்து உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை  மேலும் 6 மாதங்கள்  பயன்படுத்தும் வகையில் ரேஷன் அட்டைகளில் புதிய உள்தாள் ஒட்டப்படும்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 2017ம் ஆண்டு முதல் அனைத்து ரேசன் கார்டுகளும், ஸ்மார்ட் கார்டாக மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால்,  ‘ஸ்மார்ட்’ கார்டு தயாராக தேவையான பணிகள் இன்னும் முடிவடையாததால், ரேஷன் அட்டைகளில் மேலும் 6 மாதங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் ஒட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
போலி ரேசன் காட்டுகளை ஒழிப்பதற்காகவும், ரேசன் பொருட்கள் வாங்குவது குறித்தும் டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு ஏதுவாக  ரூ.320 கோடி செலவில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்ற. இதற்காக முழுமையான தகவல்கள் திரட்டும் கள ஆய்வு பணிகள் வரும் 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன.
‘ஸ்மார்ட்’ அட்டையில் முகவரியோ, வேறு தகவல்களோ இடம்பெற்றிருக்காது என்பதால் அதனை முகவரி ஆதாரமாக பயன்படுத்த முடியாது.
ஒரு குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது தனது ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். அவரது பெயரில் அந்த குடும்பத்துக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். யாருடைய ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறதோ, அவர் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருள் வாங்க முடியும்.
‘ஸ்மார்ட்’ அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 சதவீத அட்டைகளுக்கு ஆதார் எண் பதிவு பெறப்படவில்லை. அவை போலியா, பயன்படுத்தப்படாத அட்டைகளா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 5.43 கோடி பேர் ஆதார் எண்ணை ‘ஸ்மார்ட்’ அட்டை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 90 சதவீத பணிகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 57.19 சதவீத பணிகளும் முடிந்துள்ளன.
எனவே, தற்போதுள்ள ரேஷன் கார்டில் மேலும்  6 மாதங்களுக்கு உபயோகப்படும் வகையில் உள்தாள் ஒட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட் அட்டை வழங்கும் நாளில் இருந்து, அவர்களிடம் உள்ள பழைய ரேஷன் அட்டை மற்றும் உள்தாள் முடிவுக்கு வந்துவிடும்.
இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படவுள்ளது. வரும் ஜனவரி 26-ந் தேதியன்று கூடும் கிராமசபை கூட்டத்தில், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் உள்ள அட்டைதாரர்களின் பெயர், முகவரி விவரம் வைக்கப்படும். இதை மக்கள் சரிபார்க்கலாம். ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும், ஸ்மார்ட் அட்டைகளை பயன்படுத்தும் எந்திரங்கள் வழங்கப்பட்டு, பொருட்கள் வினியோகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் அட்டையின் வடிவம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஸ்மார்ட் அட்டை மூலம் பொருள் வினியோகம் முதலில் ஸ்கேன் மூலம் நடைபெறும். பின்னர் விரல் ரேகையை பதிவு செய்து பெறும் வகையில் மாற்றம் செய்யப்படும்.
ஸ்மார்ட் அட்டை தரப்பட்ட பின்பு, குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் தேவையில்லை என்றால் அதை அட்டைதாரரே நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். பொருள் வாங்காவிட்டால் ஸ்மார்ட் அட்டை ரத்தாகாது.
பொருள் வாங்காமல் யாருக்கும் ரேஷன் அட்டை ரத்தாகி இருந்தால், அவர்கள் புது அட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அந்த அட்டையை பெற்ற பின்னர் அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.