சிங்கப்பூர்

நேற்று சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்படச் செய்வதை லட்சிய இலக்காகக் கொண்டு அரசு செயலாற்றி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களைப் பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும் அரசுமுறை பயணமாகச் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார்.

பயணத்தில் ஒரு பகுதியாக அவர் சிங்கப்பூரில் நேற்று டமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனையும் சந்தித்துப் பேசினார். பிறகு அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக சபை நிறுவனத்திற்கும் இடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார்த் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.