கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி லிட்வினா ஜோசப், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நிகழும் கொரோனா கோரத்தாண்டவத்தைப் பார்த்து இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில், மத்திய அரசின் நிர்வாக குளறுபடிகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியதன் மூலம், நிர்வாகம் சற்று சீரடைந்ததுடன் பாதிப்பும் சற்று குறைய ஆரம்பித்தது.

லிட்வினா ஜோசப் வரைந்த ஓவியம்

இதில் மனம் ஆறுதல் அடைந்த லிட்வினா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி அந்த கடிதத்துடன் ஒரு ஓவியத்தையும் வரைந்து அனுப்பி இருந்தார்.

“நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்திகளை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். உச்சநீதிமன்ற தலையீட்டின் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு மட்டுமன்றி கொரோனா பரவலும் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதற்காக உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்” என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

படங்கள் நன்றி தி ஹிந்து

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா “வருங்காலத்தில் நீ சிறந்த குடிமகளாகவும் பொறுப்புள்ள பிரஜையாகவும் வருவாய் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உனது கடிதத்துடன் அனுப்பிய ஓவியம் நன்றாக இருந்தது.” என்று தெரிவித்திருந்தார்.

அந்த கடிதத்துடன், தனது கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகம் ஒன்றை மாணவி லிட்வினாவுக்கு பரிசாக அனுப்பியிருக்கிறார் தலைமை நீதிபதி.