சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 579 சதவிகிதம் அளவுக்கு சொத்துக்குவித்துள்ள திமுக எம்.பி. ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வழக்கின்  விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, தமிழகத்தின் பெரும்பாலான மக்களின் அதிருப்தியை சம்பாதித்த திமுக எம்.பி. ராசா, மீது கடந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திமுக எம்.பி. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே அவருக்கு சொந்த டெல்லி பங்களா  மற்றும்  சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் கிடைத்த ஆவணங்களைக் கொண்டு, ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ண மூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சாரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த  அக்டோபர் மாதம்  குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில், திமுக எம்.பி. ராசாமீது குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக் களை குவித்துள்ளதாக  தெரிவித்து உள்ளதுடன், ஆ.ராசா மற்றும், அவரின் நெருங்கிய கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, பிப்ரவரியில் ரூ.4.56 கோடி பணம் பெற்றுள்ளார்.

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து, காஞ்சிபுரத்தில் நிலம் வாங்கிக் கொடுத்ததற்கான கமிஷனாக அந்தத் தொகையை பெற்றதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் நில ஒப்பந்தம் மேற்கொண்டதை தவிர, வேறு எந்த ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

பின்னர், கோவை ஷெல்டர்ஸ் நிறுவனம், விவசாய நிலம் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஆ.ராசாவின் நெருங்கிய உறவினர்கள், இயக்குநர்களாக இருந்த அந்த நிறுவனத்துக்கு ரூ.4.56 கோடி கொடுத்தது உள்பட ரூ.5.53 கோடி மதிப்பிலான சொத்துகளை ஆ.ராசா சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளார். ஆ.ராசாவின் அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீத அளவுக்கு இந்த சொத்துகள் உள்ளன என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன்பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.

வழக்கு விசாரணை வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…