சென்னை: பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதில் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு மாநில  பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். பின்னர், தனது சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, பாரதப் பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக ஜூலை 29-ம் தேதி 2022 அன்று தமிழகம் வந்திருந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியிருக்கிறது, பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய உபகரணமான மெட்டல் டிடெக்டர்ஸ் அன்று சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான குற்றச்சாட்டை ஆதாரத்தின் அடிப்படையில் கொடுத்து  நடவடிக்கை எடுக்க ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்துள்ளார். பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன்,  தமிழகத்தில் தான் உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன என்றார்.

பழையனவற்றை மாற்றுவதும், புதியவற்றை வாங்குவதும் காலங்காலமாகச் செய்வது. தமிழக காவல்துறையில் பழைய தொழில்நுட்பங்களை எல்லாம் பின்பற்றவில்லை. தமிழக காவல்துறையிடம் இருந்து மற்ற மாநிலங்கள் எல்லாம் கேட்டு வாங்குகின்றனர் என்றால், பழைய தொழில்நுட்பம் இருந்தால் எல்லாம் வாங்கமாட்டார்கள் அல்லவா. நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழக காவல்துறை வசம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உபகரணங்கள் உள்ளன.

அதேநேரம் எதை வைத்திருக்க வேண்டும், எதை களைய வேண்டும் என்ற பயிற்சிக்கான நிலையாணை உள்ளது. அந்த நிலையாணையைத்தான் பின்பற்றுகிறோம். மேலும், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும், குற்றச்சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழியாக அவர்கள் சொல்கின்றனர்” என்று அவர் கூறினார்.

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர், உங்களின் பாஸ்வேர்ட், ஒடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை  வங்கிகள் ஒருபோதும் கேட்காது என்பது அறிவுறுத்தியதுடன், அடையாளம் தெரியாத நபர்கள் வாட்சப்பில் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், ஆனலைனில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணிலோ, தமிழ்நாடு காவல் உதவி செயலி மூலமோ புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.