சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத் திடலில் 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது. இந்த பொன்விழா பொருட்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 49 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு, பொன்விழா ஆண்டு பொருட்காட்சி நடைபெறுகிறது.
இந்த பொன்விழா கொண்டாட்ட பொருட்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசுத்துறை அரங்கங்களை அமைக்க ரூ.1.55 கோடி வழங்கியது. அதனப்டி, 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தீவுத் திடலில் டிசம்பர் 12ந்தேதி தொடங்கியது.

இந்த பொன்விழா பொருட்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த விழால் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சுற்றுலாத் துறை செயலர் கே.மணிவாசன், சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் டி.கிறிஸ்துராஜ், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் சி.லட்சுமி பிரியா, சுற்றுலாத் துறை இணை இயக்குநர் அ.சிவப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

43 அரங்குகள்:
இந்த பொருட்காட்சியில் தமிழக அரசுத் துறை மற்றும் மத்திய அரசுத் துறை அரங்குகள் என மொத்தம் 43 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. அதோடு, 15 தனியார் அரங்குகளும் உள்ளன. ராட்சத வீல், ஆக்டோபஸ், சுனாமி, ஸ்விங் சேர், டெக்னோ ஜம்ப் உட்பட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகளை கவரும் வகையில் அதிரவைக்கும் பேய்வீடு, பனிக்கட்டி உலகம், 3-டி ஷோ, பறவைகள் கண்காட்சி, வாட்டர் ரோல், கார்னிவெல் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களையும் பொருட்காட்சியில் கண்டுகளிக்கலாம்.

நுழைவுக் கட்டணம் எவ்வளவு? – நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40. சிறுவர்களுக்கு (4 வயது 10 வயது வரை) ரூ.25. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.25. www.ttdcfair.com என்ற இணையதளம் வழியாகவும் நுழைவுச் சீட்டை பெறலாம்.
பொருட்காட்சியை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 10 மணி வரையும் கண்டு களிக்கலாம். இந்த பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெறும் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.