பாட்னா: பீகார் மாநிலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 50 டன் எடை கொண்ட 60 அடி இரும்பு பாலத்தை கொள்ளைக்கூட்டம் ஒன்று இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து சென்றுள்ளது விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் உலகில் அது சம்பந்தமான திருட்டுக்களே சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தையே அலெக்காக பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளை கூட்டத்தினர். இந்த பகீர் சம்பவம்,  பிஹாரின் ரோடாஸ் மாவட்டத்தில் அமியவார் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள  அரா கால்வாயைக் கடக்க அரா-சோன் பகுதிகளுக்கு இடையே கடந்த 1972-ம் ஆண்டு இரும்பினால் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் 60 நீளத்தில் ஏறக்குறைய 50 டன் எடை கொண்டது. இந்த பாலம் காலப்போக்கில் வலுவிழந்துவிட்ட நிலையில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து பழைய பாலம் அப்படியே சிதிலமடைந்து கிடந்தது.

இதை நோட்டம் விட்டு வந்த கொள்ளைக்கூட்டம் ஒன்று, சம்பவத்தன்று, அரசு அதிகாரிகள் போல தங்களது நடவடிக்கைகளுடன், பொக்லேன் இயந்திரம், கேஸ் வெல்டிங் மெஷின் உள்பட தளவாட பொருட்களுடன் கூட்டமாக வந்து, பாழடைந்த இரும்பு பாலத்தை அதிரடியாக இடித்தும், துண்டு துண்டாக வெட்டியும் எடுதுது, லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதற்கு அந்த கிராம மக்களும் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சில நாட்களுக்கு பிறகுதான் அரசு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், பாலம் அடியோடு அகற்றப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அந்த பகுதி மக்களிடம் விசாரித்தபோதுதான் பாலம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் தரப்பிலிருந்து யாரும் வந்து பாலத்தை அகற்ற வரவில்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இரவோடு இரவாக பாலத்தை பெயர்த்தெடுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீஸிடம் ஊர் மக்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு பாலத்தின் இரும்புகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடிவருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நஸ்ரிகாஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 60 அடி நீளம், 12 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு பாலத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் வந்துள்ளது. முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இந்த மாவட்டத்தில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகளிடம் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு மாநிலத்தில், அரசுக்கு சொந்த 50 டன் இரும்பு பாலம் இரவோடு இரவாக கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.