மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு! என்ன சொல்லப்போகிறது உயர்நீதிமன்றம்?

Must read

சென்னை:
மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்  இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறது என்பதை பொதுமக்கள், அரசியல் கட்சிகள்ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த  திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்டு உள்பட அரசியல் கட்சிகளும், தமிழகஅரசும் மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் மீது  சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. பல்வேறு கட்ட விசாரணையைத் தொடர்ந்து, கடந்த விசாரணையின்போது,  அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட இந்த இடங்களில் ஓ.பி.சிக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து வாதாடிய  தமிழக அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்கள்,  இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு இன்று காலை 10:30 மணிக்கு வழங்கப்படும் என அறிவித்தது.
இதனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

More articles

Latest article