சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நடப்பாண்டு செயல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.

முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கும் வகையில் தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது.  கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய அளவிலான நுழைவு மற்றும் தகுதித் தோ்வு) எஸ்.எஸ். தோ்வில் பங்கேற்ற சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் அமா்வில் பலகட்ட விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பில்,  தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்திக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும்,  இந்தாண்டிற்கான கலந்தாய்வு அரசாணையின்படி நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், பிரதான வழக்கு விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும்,  தமிழக அரசாணையை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.