டெல்லி: மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பணிந்து, அவரது கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறையின் கீழ் மக்களவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளித்து வருகிறார்.

இந்த விவாதத்தின்போது, திமுக எம்.பி. கனிமொழி  ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தமிழகம் போன்ற மாநிலங்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருள்கள் விநியோகித்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான நிதி யார் ஒதுக்குவது யார் என்று கேள்வி எழுப்பினார்.

கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்தார். இதற்கு கனிமொழி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். தான் ஆங்கிலத்தில் பேசும்போது, அதற்கு இந்தியில் பதில் அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று கடுமையாக சாடியதுடன்,  உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசத் தெரியும். நான் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்டேன் நீங்களும் ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள். ஹிந்தியில் பேசினால் எனக்கு சரியாக புரியாது எனத் தெரிவித்தார். அதனால் ஆங்கிலத்தில் பதில் அளியுங்கள், அல்லது தமிழில் பதில் அளியுங்கள் என்று வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல், தான், சகோதரியை மதிப்பதாக கூறிய ஆங்கிலத்தில் பதிலளித்தார். அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான நிதியை மத்தியஅரசு வழங்கும் என்று கூறினார்.