லக்னோ

லக்னோ விமான நிலையத்தில் இருந்து 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு லக்கிம்பூருக்கு கிளம்பி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை.  எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றன.  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

லக்னோ மற்றும் லக்கிம்பூர் ஆகிய பகுதிகளுக்கு யாரும் வரக்கூடாது என மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.   தடையை மீறி அங்குச் செல்லப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.  பல திசைகளில் இருந்தும் உபி அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியது.   எனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் காங்கிரஸ் முதல்வர்களுக்கு உபி அரசு அனுமதி அளித்தது.

இதையொட்டி ராகுல் காந்தி உள்ளிட்டோர் விமானம் மூலம் லக்னோ ரயில் நிலையம் வந்து அங்கிருந்து சொந்த வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல முயன்றனர்.  ஆனால் காவல் அதிகாரிகள் சொந்த வாகனங்கள் லக்கிம்பூர் செல்ல அனுமதி இல்லை என அவர்களை அனுப்ப மறுத்தனர்.  இதையொட்டி ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின

இது குறித்து ராகுல் காந்தி, “முதலில் லக்கிம்பூர் செல்ல எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.    ஆனால் தற்போது சொந்த வாகனங்களில் செல்லக் கூடாது என அனுமதி மறுக்கப்படுகிறது.  எங்களை காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்வதாகக் கூறும் காவல்துறை ஏதோ திட்டத்துடன் இவ்வாறு தெரிவித்துள்ளது” என தெரிவித்தார்.

தற்போது 5 பேர் கொண்ட காங்கிரஸ் அணி லக்னோ விமான நிலையத்தில் இருந்து லக்கிம்பூர் கிளம்பி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.