சென்னை:  ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்குஏற்கனவே 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,  மேலும் 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு குழுமி உள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த நிலையில், அங்கு பாதுகாப்புக்கு மொத்தம் 5 கம்பெனி  மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதையடுத்து, ஏற்கனவே  2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்ற நிலையில், இன்று மேலும் 3 கம்பெனி பாதுகாப்பு படையினர் செல்ல இருப்பதாகவும், அவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 2ம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர் என  தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் பட்சத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. Sensitive zone (அ) பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறிய சாகு,  வாக்கு பதிவு செய்யும் நாளான் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள். வன்முறையில் ஈடுபடும் நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவார்கள், மேலும் வாக்குச்சாவடி மட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.