சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், 4,512 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு இருப்பதாக மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமுள்ளோரின், வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12ந்தேதி தொடங்கி 19ந்தேதியுடன் முடிவடைந்தது.
மொத்தம், 7 ஆயிரத்து 243 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் ஆண்கள் 6,173 பேரும், பெண்கள் 1,067 பேரும், திருநங்கைகள் 3 பேரும் அடங்குவர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 97 மனுக்களும், குறைந்தபட்சமாக வானூர், பவானிசாகர், திருச்சி மேற்கு தொகுதியில் தலா 13 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக இன்று பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். அதைத்தொடர்ந்தே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு, தமிழக சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில் 4, 512 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாகவும், 2, 743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.