டெல்லி: முதன்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர்  மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ஜோதியானது நாடு முழுவதும் 75 நகரங்களில் 40 நாட்கள் பயணம்  பயணம் செய்து தமிழகம் வந்தடைகிறது.

புகழ்மிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதன்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதுவும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இவ்விழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை  நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில்,  189 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டோர் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் அதிகளவிலான நாடுகள் பங்கேற்க உள்ளதும் இதுவே முதன் முறையாகும்.

இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி  செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த  ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை (ஜூன் 19)  மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார். அதை, பிரதமர் மோடி, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனிடம் வழங்குவார். இந்த ஜோதி 40 நாட்களில் நாட்டில் உள்ள 75 நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் சென்னை அடுத்த மகாபலிபுரத்தை வந்தடையும். ஒவ்வொரு இடத்திலும் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் ஜோதியை பெறுவார்கள்.