திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு வி.ஆர்.எஸ். பைனான்ஸ் அண்ட் சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் தீபாவளி பண்ட் பிடிப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து வந்தது.

தவணை முடிந்தும் பணம் வழங்காததை அடுத்து பணம் வசூலித்து தரும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்தவர்கள் அக்டோபர் மாத இறுதியில் இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் 10 ம் தேதி அனைவரின் வங்கிக்கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும் என்று இவர்களிடம் கூறி சமாதானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் 10 ம் தேதி பணம் வராத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களாக இந்த நிறுவனத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

ஆனால் இந்த நிறுவனத்தை பூட்டிவிட்டு அதன் உரிமையாளர் தலைமறைவானதை அடுத்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் நிறுவன உரிமையாளர் சம்சு மொய்தீன் மற்றும் அவரது உறவினர் நிஷா என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய சம்சு மொய்தீன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ள 303 பேர் இதுவரை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 43 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்று இருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.