1hightucr
சென்னை:
ங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகளை மூடக்கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ஆஜராகும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர், ‘பாடம்’ நாராயணன் தாக்கல் செய்த மனுவில், ‘உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும், 746 பள்ளிகளை மூட வேண்டும்; அங்குள்ள மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் அளித்து,  தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலைப் பள்ளி நிர்வாக சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘பள்ளிகள் வைத்திருக்க வேண்டிய, குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, 2013ல் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது; அதன் மீது, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என, கோரப்பட்டது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், நிபுணர் குழு பரிந்துரைகளின் மீது உத்தரவு பிறப்பிக்க இரு மாதங்கள் அவகாசம் கோரப்பட்டது.
மனுதாரரான பாடம் நாராயணன், ”அங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகள் மட்டுமல்லாமல், அரசின் அனுமதியின்றி இயங்கும், சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் படிப்புகளை நடத்தும் பள்ளிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், ”நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மீது, அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை; பள்ளிகளை மூடினால், ஐந்து லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் பாதிக்கப்படுவர்,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அரசு தரப்பில் மேலும், இரு மாதங்கள் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. எனவே  விசாரணை, நவ. 7க்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தனர்.
அன்றைய விசாரணையில் ஆவணங்களுடன் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என, கூறப்பட்டு உள்ளது.
அங்கீரம் இல்லாத பள்ளிகளை மூட பள்ளிக்கல்வி துறை  ஏற்கனவே உத்தரவிட்டது. ஆகஸ்டு முதல் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்படக்கூடாது என அறிவித்தது. ஆனால், தனியார் பள்ளிகள் நீதி மன்றம் சென்று தடையாணை பெற்று தற்போது அனைத்து பள்ளிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் 4,000க்கும் மேற்பட்டஅங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரிபள்ளிகள்  இருப்பது பள்ளி கல்வித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 746 பள்ளி களை மூட மட்டுமே ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், 9,600 பள்ளிகள் உள்ளன. இதில், 5,900 அரசு உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , 41ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்.  மற்றவை மெட்ரிக்  உயர்நிலை,  மேல்நிலை  மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள்.
இது தவிர, தொடக்கப்பள்ளி இயக்குனர் கட்டுப்பாட்டில், 20ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  அரசு  தொடக்கப்பள்ளிகள், தனியார்  நர்சரி  மற்றும் பிரைமரி பள்ளிகள் இயங்குகின்றன.
தமிழ்நாட்டில்  4,000க்கும் மேற்பட்ட  நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்  பள்ளிகள்  அங்கீகாரம்  இல்லாமல் இயங்குகின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு வசதிகளும் கிடையாது. அவசர வழி, பாதுகாப்பு முன்னேற்பாடு போன்ற வசதிகள் கிடையாது. பெரும்பாலும் கழிவறை வசதிகள் சரிவர இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு கும்பகோண  விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு.