கோவா-வில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்த பெங்களூரைச் சேர்ந்த சுசனா சேத் என்ற பெண் தன்னுடன் அழைத்து வந்த 4 வயது மகனை கொலை செய்ததாக கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார்.

4 வயது குழந்தையின் வாயில் தலையணை அல்லது துணியை வைத்து அழுத்தி மூச்சு திணறல் ஏற்படுத்தி சாகடித்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் சடலம் தந்தை வெங்கட்ராமனாவிடம் ஒப்படைக்கப்பட்டு பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

வெங்கட்ராமனாவை 2010ம் ஆண்டு திருமணம் செய்த சுசனா சேத் 2019ம் ஆண்டு குழந்தை பெற்றுள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2020ம் ஆண்டு விவாகரத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். குழந்தையைப் பார்க்க ஞாயிற்று கிழமைகளில் தந்தைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தோனேசிய சென்றிருந்த வெங்கட்ராமனா ஜனவரி 7 ம் தேதி ஞாயிறன்று கோவாவில் சுசனா சேத்துடன் இருந்த தனது மகனுடன் வீடியோ காலில் பேசியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெங்கட்ராமனா

இதனையடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதால் வெங்கட்ராமனாவிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், குழந்தையை வளர்ப்பது யார் என்பது குறித்த வழக்கில் இன்று (ஜனவரி 10) தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்ததை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொலை தொடர்பாக சுசனா சேத்தை கைது செய்த கோவா போலீசார் அவரை விசாரணைக்காக கோவா அழைத்துச் சென்றுள்ள நிலையில் காவல்துறை விசாரணையில் இதுகுறித்து அவர் எதுவும் பேச மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?