கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளவர் சுசனா சேத்.

39 வயதான இவர் தனது 4 வயது மகனுடன் சனிக்கிழமை அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டேவில் அறையெடுத்து தங்கியுள்ளார்.

திங்கட்கிழமை அன்று அறையை காலி செய்த அவர் பெங்களூரு செல்ல டாக்சி ஏற்பாடு செய்ய ஹோட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டாக்சியில் பெங்களூரு திரும்பிய அவர் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே வந்த போது காவல்துறையில் பிடிபட்டார்.

சுசனா சேத் தனது அறையை காலி செய்ததை அடுத்து அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றபோது அறைக்குள் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு அவர் வரும் போது அவருடன் வந்த 4 வயது குழந்தை அவர் அறையை விட்டு வெளியேறும் போது இல்லாததை உணர்ந்தனர்.

பின்னர், சிசிடிவி மூலம் அதனை உறுதிசெய்து கொண்ட ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக கோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையின் போது பெங்களூரு செல்ல டாக்சி வேண்டும் என்று சுசனா சேத் கேட்டதாகவும் இவ்வளவு தூரம் எதற்காக டாக்சியில் பயணிக்க வேண்டும் விமானத்தில் பயணிக்கலாமே என்று தாங்கள் கூறியதற்கு காரணங்கள் கூறி சமாளித்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டாக்சி ஓட்டுனரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட காவல்துறையினர் சுசனா சேத்-திடம் அவரது மகன் குறித்து விசாரித்துள்ளனர்.

அவனை நண்பரது வீட்டில் விட்டுருப்பதாக சுசனா சேத் கூறியதை அடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஓட்டுனரிடம் கோவாவில் அதிகம் பேசப்படும் கொங்கணி மொழியில் காரை அருகில் உள்ள சித்ரதுர்கா காவல்நிலையத்திற்கு விடுமாறு கூறியுள்ளனர்.

சித்ரதுர்கா காவல்நிலையத்தை தொடர்பு கொண்ட கோவா போலீசார் அளித்த தகவலை அடுத்து நடைபெற்ற சோதனையில் சுசனா சேத் கொண்டு வந்த பையில் அவரது மகன் சடலமாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2010ம் ஆண்டு தனக்கும் வெங்கடராமன் என்பவருக்கும் திருமணமானதாகவும் 2019ம் ஆண்டு தங்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் பிறகு 2020ம் ஆண்டு விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில் வெங்கடராமன் தனது மகனை பார்க்க அடிக்கடி வருவதாக கூறிய சுசனா சேத் அது தனக்கு பிடிக்காததால் மகனை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவா போலீசார் மற்றும் வெளிநாட்டில் உள்ள சுசனா சேத்-தின் முன்னாள் கணவர் வெங்கடராமன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வந்த பிறகு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்று கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.