டெல்லி: நாட்டில் மேலும் 4 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக மத்திய அரசு  தடை விதித்தது.

ஆனாலும், சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு  வருகின்றன. அதில், கொரோனா கண்டறியப்படுவோரின் சளி மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அப்படி நடத்தப்பட்ட சோதனைகளில், இதுவரை 29 பேருக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் மேலும் 4 பேர் உருமாறிய புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட 25 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.