முதுமலை: ஆஸ்கார் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் அடைக்கலம் தேடி 4 மாத யானைக்குட்டி வந்து தஞ்சமடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை – வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
‘தி எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் அவார்டு கிடைத்துள்ளது. முதுமலைப் பகுதியில் யானைகளைப் பராமரித்து வரும் பொம்மன் – பெள்ளி இவர்களுக்கும் குட்டி யானை ரகுவுக்கும் இடையேயான அழகிய உறவை இயற்கை எழில்கொஞ்ச படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது முதலே கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வந்த நிலையில், ஆஸ்கருக்கும் பரிந்துரையானது.
இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த திரைப்படத்தில், தோன்றிய யானைக் காப்பாளர்களான பொம்மன், பெள்ளிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்தத் தம்பதிகளைப் பாராட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானைப்பாகன்கள், அவர்களின் உதவியாளர்களுக்கு ஒரு லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், ‘த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றியிருந்த தம்பதியான பொம்மன் – பெள்ளி இருவரும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை முன்னதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”இவர்களைப் பிரிந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது, நான் இப்போது என் குடும்பத்தை அடைந்தது போல் உணர்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்த நிலையில், இந்த தம்பதிகளிடம் தற்போது மீண்டும் ஒரு 4 மாத யானைக்குட்டி தஞ்சமடைந்துள்ளது. பெற்றோரை இழந்து வாடிய தருமபுரியைச் சேர்ந்த 4 மாத குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதி வளர்க்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, யானைக்குட்டி பொம்மைன் பெள்ளி தம்பதியுடன் பாசமாக இருக்கும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, ‘யானை பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக’ நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.