மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த போதை மாணவர்கள் கைது

Must read

டில்லி:

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை பின்தொடர்ந்த நான்கு இளைஞர்களை  காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி,  நேற்று (ஏப்ரல் 1ஆம் தேதி)  மாலை டில்லியில்  தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்., அவரது பாதுகாப்பு வாகனமும் உடன் வந்தது.

அப்போது தனது காரை ஒரு கார் பின்தொடர்ந்தது வந்ததை ஸ்மிருதி இராணி கவனித்தார். உடனே டில்லி போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார்.   உடனடியாக விரைந்து வந்த டில்லி போலீஸார் அமெரிக்க தூதரக பகுதி அருகே  அந்த மர்ம காரை மடக்கினர்.

அந்த காரில் நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்களை  கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர்.

அந்த இளைஞர்கள் நால்வரும் டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் என்பது தெரியவந்தது. பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டு மது அருந்திய அவர்கள், அமைச்சரின் காரை முந்திச் செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அந்த மாணவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  ஆனாலும் விசாரணை தொடர்வதாக போலீஸார் தெரிவித்தனர்.

More articles

Latest article