சென்னை

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை தியாகராயர் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் திடீரென மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்கியுள்ளனர்.  இந்த தாக்குதல் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களைத் தேடும் பணியையும் தீவிரப்படுத்தினர்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் மீது பாட்டில்களை வீசிய சம்பவத்தில் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மதுபோதையில், காவலாளியுடன் தகராறு செய்தபடி, கற்கள், காலி மதுபாட்டில்களை அலுவலகத்திற்குள் வீசியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்

”கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளின் சட்ட விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கும் வகையில் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.