
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியை, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி.
தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையே டி-20 தொடர், தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளின் முடிவில், இரண்டு அணிகளும் 1-1 என்று சமநிலை வகித்தன. இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பெளலிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைக் குவித்தது.
அந்த அணியின் மாலன்(55) மற்றும் எய்டன் மார்க்ரம்(63) அரைசதம் அடித்தனர். வான் டெர் டுசேன் 34 ரன்களை அடித்தார். அந்த அணியின் 5 பேட்ஸ்மென்களுமே, பந்துகளைவிட ரன்கள் அதிகமாக அடித்தனர்.
பின்னர், சற்று சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் செய்ததுதான் அதகளம். 204 என்ற இலக்கை, ஏதோ 24 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவதைப்போல் நினைத்து அசால்ட் காட்டியது பாகிஸ்தான்.
அந்த அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான், 47 பந்துகளை சந்தித்து, 2 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களை சாத்த, மற்றொரு துவக்க வீரர் கேப்டன் பாபர் ஆஸம் செய்துதான் மரண மாஸ்!
மொத்தம் 59 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்ஸர்கள் & 15 பவுண்டரிகளுடன், 122 ரன்களை வெளுவெளு என்று வெளுத்து வாங்கினார். மேற்கண்ட இருவருமே வெற்றியை உறுதிசெய்துவிட்டனர்.
பாபர் ஆஸம் அவுட்டானவுடன், ஃபக்கர் ஸமான் வந்து 8 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். அவர், ஜஸ்ட் 2 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் ஆட்டத்தை நிறைவுசெய்தார்.
இதனால், அவ்வளவு பெரிய இலக்கை, வெறும் 18 ஓவர்களில் எட்டி, அசத்தல் வெற்றியை ஈட்டியது பாகிஸ்தான் அணி. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது அந்த அணி.
[youtube-feed feed=1]