பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டுவீசிய தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே மாநில திமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. கோவை மாநகரம் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து துவேசம் காரணமாக தொடங்கிய பதற்றம், அவரை எதிர்த்து பாஜகவினர் பேசிய பேச்சு, அதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை யால், பாஜக மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது, இதற்கிடையில் பி.எஃப்.ஐ அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு போன்றவற்றால் கொங்கு மண்டலம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து, பிஎப்ஐ அமைப்பினர், பாஜக, இந்து முன்னணியை குறி வைத்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால், கோவை உள்பட பல மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில்,.பொள்ளாச்சியில் கடந்த 20 ஆம் தேதி பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நபர்களினுடைய கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஆட்டோவும், அவரது தந்தையின் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு நடத்தியதில், பெட்ரோல் குண்டு வீசியவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். அதன்படி, பொள்ளாச்சியை சேர்ந்த முகமது ரபிக், ரமீஸ் ராஜா, மாலிக் என்கிற சாதிக் பாஷா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.