சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில், மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திமுக அரசின், கருணையால் பரோலில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களது மனுவில், ஏற்கனவே மற்றொரு குற்றவாளியான பேரறிவாளனை, மே 18-ந் தேதி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ்  பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தது.  பேரறிவாளன் 31 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டார். அவரது சிறை தண்டனை, நன்னடத்தை, ஜாமீன் காலம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து   அரிதிலும் அரிதாக 142-வது பிரிவை பயன்படுத்தி அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது

இந்த பிரிவை சுட்டிக்கட்டியே தற்போது, நளினியும், ரவிச்சந்திரனும், தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை  இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வில்  நடைபெற்றது. அப்போது மனுதாரர்தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, மனு குறித்து மத்தியஅரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.