சென்னை: மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது.  பின்னர் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. புயல் காரணமாக டெல்டா மாவட்டகளில் பெய்த மழை காரணமாக விளைநிலங்கள், பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து, அதிகாரிகள், பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  மாண்டஸ் புயலதல், தமிழ்நாட்டில் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,   பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்  என்றார்.

மேலும்,   டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்,  சம்பா நெல் கொள்முதலுக்காக தமிழ்நாடு முழுவதும் 3000 கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.