சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான கடைகள், வர்த்தக, வணிக நிறுவனர்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் மாநகராட்சியிடம் உரிமம் புதுப்பிக்க வேண்டும். இ ஒவ்வொரு தெருவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளின் வகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் கடைகளுக்கான உரிமம் தொகை ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாயில் இருந்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏராளமான கடைகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து உரிமம் இல்லாத பல்வேறு கடைகளுக்கு ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உரிமம் இல்லாமல் கடைகள் செயல்படுகிறது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், கடை நடத்துவதற்கான உரிமம் புதுப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.பல கடைகள் உரிமம் பெறாமலேயே நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. உரிமம் புதுப்பிக்காமல் கடை நடத்துவது, உரிமம் பெறாமல் கடை நடத்துவதால் சென்னை மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மண்டல வாரியாக உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி முழுவதும் மண்டல வாரியாக உரிமம் புதுப்பிக்காத கடைகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.