சென்னை: கேரளாவை மிரட்டி வரும் கொசுக்கள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனை களுக்கும் பொது சுகாதாரத்துறை அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும், வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு குறித்த கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,  “க்யூலெக்ஸ் எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ்  நோய்ப் பரவுகிறது. இந்த நோய் பரவியர்களுக்கு  கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.  இந்தக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நரம்புசார்ந்த பிரச்னைகளும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படக் கூடும்.

. ’வெஸ்ட் நைல் காய்ச்சல்’ அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களிடம் அளிக்க வேண்டும்”எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், “தமிழ்நாட்டில் இதுவரை வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. அதனால், அதுகுறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில், அதற்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இதைத் தவிர, தங்களது சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கழிவுநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு குறித்து கோவையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  ‘கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும், தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நிதி திட்டத்தில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும்.

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

தமிழகத்தில் குரங்கு அம்மை தாக்கம் இல்லை. ஆனாலும் கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களை தேடி செல்லும் மருத்துவ பணியாளர்களும் வீடு வீடாக செல்லும் போது குரங்கு அம்மை பாதிப்பு குறித்து கண்காணித்து வருகின்றனர். யாரும் பயப்பட தேவையில்லை’ என்று கூறினார்.