டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவி வண்ணப்புகை குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

எதிர்கட்சியினரின் இந்த கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து மக்களவையில் கோஷம் எழுப்பிய திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 33 பேரை சபாநாயகர் ஓம்பிர்லா இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திமுக-வின் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், கே. ஜெயக்குமார், விஜய் வசந்த், அப்துல் காலிக் உள்ளிட்ட 33 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வியாழன் அன்று கனிமொழி, சு. வெங்கடேசன், மாணிக் தாகூர், ஜோதிமணி, உள்ளிட்ட 13 மக்களவை உறுப்பினரும் மாநிலங்களவையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ ப்ரைன் எம்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.