‘தேசத்திற்கான நன்கொடை’ (Donate For Desh) என்ற திரள் நிதி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று துவக்கி வைத்தார்.

பணக்காரர்களிடம் இருந்து கட்சி நிதி பெறுவது அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு அவர்களைச் சார்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும் அதனால் தேசநலன் கொண்ட மக்களிடம் இருந்து நிதி திரட்டும் திட்டத்தை துவக்கியுள்ளோம் என்று திட்டத்தை துவக்கி வைத்த மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் ரூ. 138, ரூ. 1,380 அல்லது ரூ. 13,800 ஆகிய தொகையை கட்சியின் இணையத்தளம் மூலமாக நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த குறிப்பிட்ட தொகையைத் தவிர வேறு எந்த தொகையும் கூட அளிக்கலாம் என்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய முயற்சியான ‘தேசத்திற்கான நன்கொடை’ என்ற திரள் நிதி திட்டம் இணையத்தளம் வாயிலாக வரும் 28 ம் தேதி வரை செயல்படுத்தப்படும். அதன் பின் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீடுவீடாக சென்று நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீட்க மக்களின் இந்த பங்களிப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.