சென்னை: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு  30ஆயிரம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அநாதைகளாக ஆகி இருப்பதாகவும்,  தமிழகத்தில் மட்டும் 1400 குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கடந்த ஜனவரி முதல் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா 2வதுஅலையின் தாக்கம் தீவிரமடைந்ததுடன், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுத்தியது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் அதிகளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது போல தமிழகத்திலும் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவல்   நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இழப்பு எண்ணிக்கை முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் கூடுதலாக இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா தொடர்பான உச்சநீதி மன்ற வழக்கு ஒன்றில்,  குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம், கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அநாதைகளாகி உள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது.

20201 ஏப்ரல் 1ந்தேதி முதல் 2021ம் ஆண்டு ஜூன் 5ந்தேதி வரை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குழந்தைகள் தங்களின் ஒன்று அல்லது இரண்டு பெற்றோர்களையும் இழந்துவிட்டதாக தெரிவித்து உள்ளது. இந்த பட்டியலில், தமிழகத்தில்  802 குழந்தைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால்,  தமிழகத்தில் பெற்றோர்களை இழந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 1400 என தமிழகஅரசு தகவல் தெரிவிக்கிறது. இதில், 50 குழந்தைகள் வரை தங்களின் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மாநிலம்  முழுவதும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

தமிழகஅரசு சமீபத்தில் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பீடு வழங்கப்படும் என்று  அறிவித்திருந்தார். ற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மூன்று லட்சமும் வைப்புத் தொகையாக வங்கிகளில் வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல மத்தியஅரசும், ரூ.8லட்சம் இழப்பீடு, உயர்கல்வி படிப்பு என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம் குறித்து, தமிழக  சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில்  கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தையில் ஒருவரையோ, அல்லது 2 பேரையுமோ இழந்த குழந்தைகளின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை கடந்த மே 29-ந்தேதி முதல்-அமைச்சர் அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள அந்த நல உதவிகள் மிகச்சரியாக பயனாளிகளிடம் சென்று சேர்வதற்கான வழிகாட்டும் கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைக்கப்படும்.

இந்த குழுவானது, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தலைமையில், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மைச் செயலாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்களாக  சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், சமூகநலத்துறை ஆணையர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து அரசால் தேர்வு செய்யப்படும 2 பேர் உறுப்பினராக இருப்பார்கள். சமூக பாதுகாப்பு ஆணையர், அந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.