சென்னை: இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு கேரளாவில் 3 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வகை  கொரேனாவால்  கூட்டு பாதிப்பு இல்லை என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.


இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில்,  அதிகபட்சமாக கேரளாவில் 281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதேபோல், கர்நாடகாவில் புதிதாக 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 37 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19 பேர் மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சத்தீஸ்கரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 119 ஆக உள்ளது. மேலும், 681 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால்  3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தரமணியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,   ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா,  தெற்காசிய நாடுகளில்  அதிக அளவில் காணப்படுகிறது.  இந்த புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றவர்,  இந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெளிவு படுத்தினார்.

மேலும்,  புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும்,  இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில், கொரோனா உள்பட எந்தவொரு நோய் பரவலையும் எதிர்கொள்ள 1.25 லட்சம் படுக்கை வசதியும், 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.