சென்னை: தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிசம்பர் 3வது வாரத்தில் பெய்த அதிகனமழை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின. 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட பிரதான அணைகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏராளமான குடியிருப்புகள் மூழ்கியது.  பல கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், 10 நாட்களை கடந்தும் இன்னும் மீண்டு வர முடியாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில், தற்போது பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்றும் காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.  இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மழை  காரணமாக,  பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்த  பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறில் 6.8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றும் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3425 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 5,890 கனஅடியும் இன்று காலை நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம். எனவே நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரத்தில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் வெள்ளம் ஏற்பட இல்லை என்றாலும், முன்எச்சரிக்கையாக மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அந்த பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்திலும்  கலெக்டர்  லட்சுமிபதி எச்சரித்துள்ளார்.  தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டங்களில் மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை என்றாலும், மழை எச்சரிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆறு முலம், மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.