சென்னை: பொங்கல் விடுமுறை கொண்டாட்டத்தின்போது, அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

பொங்கல் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திக்கு 20 பேர் சென்றுள்ளனர். அதில் விடுமுறையை கழித்து ஆலங்குளம் திரும்பிய போது 3 பேர் தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள அமராவதி ஆற்றில் அபாய பலகை இருப்பதை உணராமல் குளித்துள்ளனர். அப்போது சின்ன கருப்பு (வயது 31) பாக்கியராஜ் (வயது 39) ஹரி (வயது 16) ஆகிய மூன்று பேரும் நிலை தடுமாறி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆற்றில் மூழ்கிய மூவரையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த  எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு ஆகிய இருவரும் தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். ஹரி என்பவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆவார். ஆற்றில் குளித்த போது மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவிகளையும் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு மற்றும் சிறுவன் ஹரி ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம், மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே நேற்று மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

அதுபோல, நீலகிரி மாவட்டம் சேரங்கோடு-1 கிராமம் – அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  அறிவித்துள்ளார்.