சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேசகத்தை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீராமர் ரத ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உ.பி. மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள  ஸ்ரீ ராமர் கோயில் திறப்பு விழா ஜன. 22-ம் தேதி கும்பாபிஷேகத்துடன் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு ஆன்மிக  நிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையில், வரும்   21, 22-ம்தேதிகளில் சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம ரத ஊர்வலம், ஸ்ரீராம நாமசங்கீர்த்தனம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஜன.21-ம் தேதி காலை 8 மணி அளவில் ஸ்ரீராம ரத ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ரத ஊர்வலம், ஸ்ரீ கோதண்ட ராமர் கோயிலில்இருந்து புறப்பட்டு, மேற்கு மாம்பலத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆரிய கவுடா சாலையில் உள்ள அயோத்யாஅஸ்வமேத மண்டபத்தில் நிறைவு பெறும்.

இந்த ரத ஊர்வலத்தில் சித்தூர் குழுவினரின் ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம், ஸ்ரீ ஜெயம் குழுவினரின் குழந்தைகள் கோலாட்டம், நாராயணன் குழுவினரின் நாலாயிர திவ்ய பிரபந்தம், மீனலோசனி குழுவினரின் பஜனை, ரமேஷ் பாகவதர், ஸ்ரீவாஞ்சியம் முரளி பாகவதரின் நாம சங்கீர்த்தனம், ஜே.ஜி.இந்து வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதைத்தொடர்ந்து, ஜன. 22-ம் தேதி, அயோத்யா மண்டபத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை உடையாளூர் கல்யாண ராம பாகவதரின் ஸ்ரீராம நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழா நேரலைக் காட்சிகள் அயோத்யா மண்டபம் அருகில், வல்லப கணபதி கோயில், ஸ்ரீ சாய்பாபா கோயில், ஸ்ரீ சங்கரமடம் கோசாலை ஆகிய இடங்களில் ஒளிபரப்பப்படும்.

மதியம் 12 மணி அளவில் ஸ்ரீ சங்கர மடம் கோசாலை, எல்லையம்மன் கோயில், ஸ்டேஷன் ரோடு, குப்பையா தெரு சந்திப்பு,ஸ்ரீ சாய்பாபா கோயில், அயோத்யாமண்டபம், ராம நாம வங்கி, ஸ்ரீ வல்லப கணபதி கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், ஜெயமுத்து மாரியம்மன் கோயில், கணபதி தெரு முத்து மாரியம்மன் கோயில், சிருங்கேரி மடம் ஆகியஇடங்களில் அன்னதானம் நடைபெற உள்ளது.