இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கல்லூரிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

Must read

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நடப்பாண்டு 4 கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே சென்னை கொளத்தூரில் ஒரு கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து, மற்ற 3 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு – அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று புதிய கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு – அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று புதிய கல்லூரிகளை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி,சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Com. BBA. BCA, B.Sc. Computer Science ஆகிய நான்கு பாடப் பிரிவுகளுடன் கல்லூரிகள் தொடங்கிட உயர் கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக சென்னை, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2.11.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக,தற்போது பழனி – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம், சின்னய கவுண்டன்வலசில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும்,சமய வகுப்புகளுடன் தற்காலிக கட்டடத்தில் திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட விளாத்திக்குளம் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தற்காலிகக் கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காகவும். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இக்கல்லூரிகள் பெரிதும் உதவியாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில்,கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி. உயர்கல்வித் துறை அமைச்சர்  க.பொன்முடி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்.மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article