சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பரவமழை காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், தலைநகரமே தண்ணீரில் மிதந்தது. இதை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், நேரடி களஆய்வும் மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார். fடந்த 7ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் உள்ள நீர் வடியாமல், மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, நேற்று சென்னை, செம்மஞ்சேரி பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளைப்  பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, செம்மஞ்சேரி, குமரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கோவிட் தடுப்பூசி முகாம்களை முதல்வர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதையடத்து இன்று மீண்டும் செம்மஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல்வர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே. வீரராகவ ராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்த ராவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.