களவாணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் வீட்டை காலி செய்யக்கோரி அவரது வீட்டின் உரிமையாளருக்கும் அவருக்கும் இடையே பஞ்சாயத்து எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கறுப்பு ராஜா என்ற இயற்பெயர் கொண்டவர் நகைச்சுவை நடிகர் கஞ்சா கறுப்பு.

2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து ‘கஞ்சா கறுப்பு’ என்று அழைக்கப்படுகிறார்.

2021ம் ஆண்டு முதல் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ. 20,000க்கு வாடகைக்கு குடியிருந்து வருகிறார் கஞ்சா கறுப்பு.

சென்னையில் சினிமா ஷூட்டிங் நடக்கும் போதெல்லாம் இங்கு வந்து தங்கும் கஞ்சா கறுப்பு கடந்த சில மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ. 3 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் ரமேஷுக்கும் கஞ்சா கருப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கஞ்சா கருப்பு மீது மதுரவாயல் காவல்நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளதை அடுத்து காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரமேஷ் அளித்துள்ள புகாரில், தனது வீட்டை கஞ்சா கருப்பு மேல் வாடகைக்கு விட்டிருப்பதாகவும், வீட்டை மதுபான கூடம் மற்றும் லாட்ஜ் போல் தகாத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.

மேலும், இதை கண்டித்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கஞ்சா கருப்பிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் தான் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கஞ்சா கருப்புவும் புகார் அளித்துள்ளார்.

வீடு வாடகை தொடர்பாக எழுந்துள்ள இந்த பிரச்சனை தொடர்பாக இருவரிடமும் மதுரவாயல் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.