டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக,  சரணடைய வேண்டிய பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் பல்வேறு காரணங்களை காட்டி, சரணடைவதற்கு அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் பில்கிஸ் பானு குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது முன்கூட்டியே விடுவித்தது. இதை எதிா்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கால அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறவிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த அதிகாரபூா்வ தகவல் ஏதும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட தஹுடு மாவட்ட கண்காணிப்பாளா் பல்ராம் மீனா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரணடைவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் கால அவகாசத்தை நீட்டிக்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மூன்று குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனுவில், தங்களுக்கு பல்வேறு நோய் உள்ளதால், அதற்காக சிகிச்சை எடுத்துவருவதால் அவகாசம் வேண்டும் என்றும், மற்றொருவர், தனது  மகன் திருமணம் நடைபெறவுள்ளதாக அதில் கலந்துகொள்ள வேண்டும் என அவகாசம் கோரியுள்ளார். இன்னொருவர்,  தற்போது  அறுவடை நடந்து வருவதால் அவகாசம் வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்.

21 ஆம் தேதி சரணடையும் அவகாசம் முடிவடைவதால் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கான அமர்வினை நாளை தலைமை நீதிபதி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .