620tra
 
பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை  இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகள் பயணத்தை மேற்கொள்கிறார். முதலில் அவர் பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்சுக்கு செவ்வாய்  நள்ளிரவு புறப்பட்டுசென்றுள்ளார்.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து  இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின்  செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  பிரதமர் மோடி முதலில் பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார். குறிப்பாக இந்திய- ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்புக் கூட்ட்த்திலும் கலந்து கொள்கிறார். கடந்த  வாரத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத்தாக்குதலுக்குப்பிறகு பிரஸெல்லஸ் செல்லும் முதல் வெளிநாட்டுத்தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் தலைநகர் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது வாஷிங்டன் நகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் நான்காவது அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டில் அவர் அணு சக்தி பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொழில்நுட்பங்கள், கருவிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
மேலும் அம்மாநாட்டிற்கு வருகைதரும் பல வெளிநாட்டுத் தலைவர்களுடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.
3 நாள் பயணத்தை இறுதிசெய்யும் முன்  சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் சவுதி அரேபியாவுக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இரண்டு இந்திய நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்நாட்டுத் தலைவருடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்த பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேச உள்ளார்.
பிரதமர் மோடியின் 3 நாள் சுற்றுப்பயணத்தின்போது பிரஸெல்லஸ் மற்றும் சவுதி அரேபியாவில் பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் லாகூரில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.அணுசக்தி மாநாட்டு வருகையின்போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும்  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்துப் பேசக்கூடும்  என முன்னர்  கூறப்பட்டது.