tn
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தேர்தலுக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சியும் பெரும்பாலான தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த சட்டசபை தேர்தலில் பல முனைப்போட்டி உருவாகி இருக்கிறது.
அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டன. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.