சென்னை: பிப்ரவரி 24ந்தேதி மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி ‘தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழகம் வெற்றிநடை போட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளதுடன் இன்றைக்கு தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற திமுக ஆட்சி, மக்களை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கிறது. மின் கட்டணம், சொத்து வரி, பால் பொருட்களின் விலை என சகலத்தையும் உயர்த்தி பொதுமக்கள் வாழ்வையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. நாட்டில் போதைப் பொருள் புழக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் தலைவிரித்து ஆடுகிறது; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அன்பார்ந்த கழக உடன்பிறப்புகளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம்; ஏழை, எளிய மக்களின் விடிவெள்ளி; மாற்றாரும் போற்றிப் பாராட்டும் சிங்கநிகர்த் தலைவி; மக்கள் அனைவராலும் பாசத்தோடு ’’அம்மா’’ என்று அழைக்கப்படும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் 75-ஆவது பிறந்த நாளில், அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும்; அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும் இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’’ என்ற குறளுக்கேற்ப, வாழும் காலத்திலேயே தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களில் எல்லாம் இதய தெய்வமாக வீற்றிருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இறை நிலையோடு கலந்துவிட்ட நிலையிலும், நம்மையெல்லாம் வழிநடத்தும் ஆற்றல் மிகு சக்தியாக இருக்கிறார். அவருடைய பிறந்த நாளினை நாம் நினைவு கூர்ந்து கொண்டாடுகின்ற இந்த வேளையில், தன்னிகரில்லாத் தலைவியாக, இந்திய அரசியல் வானில் வீறுநடை போட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்து வந்த சோதனைகளையும், நிகழ்த்திக் காட்டிய இமாலய சாதனைகளையும் நினைவு கூர்வதும், இளம் தலைமுறைக்கு அவற்றை கொண்டுபோய்ச் சேர்ப்பதும் நமது தலையாய கடமையாகும்.

அரசியல் களத்தில் தீய சக்திகளை வீழ்த்தும் பணியில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எதிர்கொண்ட சோதனைகள் சாதாரணமானவை அல்ல. புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு அவர் கட்டியெழுப்பிய மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி அழித்துவிட ஒருபக்கம் எதிரிகளும், இன்னொரு பக்கம் துரோகிகளும் இழி செயல்கள் செய்த நேரத்தில், அறம் என்னும் வாளேந்தி களமாடி நம் உயிர் நிகர் கழகத்தையும், தமிழ் நாட்டு மக்களையும் காத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். சட்டமன்றத்திற்குள்ளாகவே புரட்சித் தலைவி அம்மா அவர்களை அவமானப்படுத்தி, அவரை அச்சுறுத்தி அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்திவிட நினைத்தார்கள்

தீய சக்திகள். “எந்த சட்டமன்றத்தில் இந்த ஆதிக்க கும்பலால் அவமானப்படுத்தப் பட்டேனோ அந்த சட்டமன்றத்தில் இனி நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன்” என்று பிடரி சிலிர்த்த சிங்கத்தைப் போல சபதமேற்று, அங்கிருந்து வெளியேறிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கோடான கோடி தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு முதலமைச்சராகவே சட்டமன்றத்திற்குள் நுழைந்த, அந்த மெய்சிலிர்க்கும் தருணங்களை வரலாறு ஒருபோதும் மறக்காது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுத்திய பல்வேறு முத்தான திட்டங்களில் ஒருசிலவற்றை இங்கே நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், புரட்சித் தலைவருக்குப் பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடி சாதனை படைத்தது

இந்தியாவிலேயே ஒரு மாநிலக்கட்சி, அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு வென்று காட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாற்றுச் சாதனையை பெற்றுத் தந்தது;

தமிழ் நாட்டிற்கான காவேரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, நீதிமன்றம் மூலமாக மத்திய அரசிதழில் வெளியிட தொடர்ந்து போராடி வெற்றி கண்டு, காவேரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்தியது

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்

ஏழை மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, அரிசி முதலானவற்றை வழங்கியதோடு, மின்வெட்டால் சீரழிந்திருந்த தமிழ் நாட்டை மீட்டெடுத்து வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது

இந்தியா மட்டுமின்றி உலகநாடுகள் பலவும் வியந்து பாராட்டிய தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தாலிக்குத் தங்கம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான மடிக் கணினி, மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், சீருடை உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கியது

சாதாரண மக்களும் வசதி படைத்த மக்களுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தது

திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்களென்று அறிவித்தது

முந்தைய அரசின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக நிலவிய நில அபகரிப்புகளை முற்றிலுமாக தடுக்கும் வகையில், நில அபகரிப்பு தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து பல்வேறு குடும்பங்களின் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தது

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் வறியோரின் வாட்டத்தைப் போக்க விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இன்றும் தமிழ் நாட்டில் பல கோடி ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பை உறுதி செய்து கொண்டிருக்கின்ற 69 சததவீத இடஒதுக்கீடு சட்டம் கண்டு, அதனை இந்திய அரசியலமைப்பு 9-ஆவது அட்டவணை பாதுகாப்புடன் (76-ஆவது சட்டத் திருத்தம்) இடம்பெறச் செய்து, சமூகநீதி காத்த வீராங்கனையாக விளங்கியது என தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆற்றிய அரும்பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், உன்னதமான மக்கள் பணிகள் ஆகிய அனைத்தும், தமிழ் நாட்டின் சமகால வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இலங்கையில் நடந்த குடும்ப வாரிசு அரசியல் அந்த நாட்டை இன்றைக்கு சீரழிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இந்த நிலையை 12 ஆண்டுகளுக்கு முன்பே தனது தீர்க்கதரிசன பார்வையால் கணித்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில், இலங்கையின் கொடுங்கோலர்களுக்கு எதிராகக் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் இன்றளவும் ஈழத் தமிழர்களின் கரங்களில் ஒரு வலிமையான கருவியாக இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாடு அரசியல், இந்திய அரசியல் மட்டுமின்றி சர்வதேச அரசியல் குறித்தும், தீர்க்கமான பார்வையும் புரிதலும் கொண்டிருந்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அந்த மாபெரும் தலைவி தன்னுடைய இறுதி சுவாசம் இருக்கும் வரை நேசித்த ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்காக கழகம் தொடர்ந்து உழைக்கும் என்ற உன்னத லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், எனது தலைமையிலான கழக ஆட்சியில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது;

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கியது

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 6,211 ஏரிகள், குளங்கள், குட்டைகளில் தூர் வாரியது;

விவசாயப் பெருமக்களின் 60 ஆண்டுகாலக் கனவை நனவாக்கும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி நீர்ப்பாசனத் திட்டம் துவக்கப்பட்டது

தென்மாவட்ட மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில் காவேரி–குண்டாறு இணைப்புத் திட்டம் செயலாக்கம் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலம் அமைத்தது; காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து, காவேரி கழிமுகப் பகுதி விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தது

11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, இதன் மூலம் புதிதாக 1,650  இடங்கள் தோற்றுவிக்கப் பட்டது; மேலும், 7சட்டக் கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 4பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டது;

சேலம் மாவட்டம் தலைவாசலில், 1,102 ஏக்கரில் 1,203 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைத்தது

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் மூலம் ஆயிரக்கணக்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவக் கல்வி பயில்வது ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே தேவையான மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில்,

தமிழகம் முழுவதும் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது என, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், விடியா திமுக ஆட்சி பதவியேற்ற நாள்முதல், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முத்தான திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் மூடுவிழா நடத்தியும், பெயர் மாற்றம் செய்தும் வருகிறது. நாம் செய்திருக்கின்ற எண்ணற்ற சாதனைகள், புரட்சித் தலைவி அம்மா என்னும் பேராளுமையிடம் கற்றுக்கொண்டதன் விளைவே ஆகும்.

புரட்சித் தலைவியின் 75-ஆவது பிறந்த நாளை நாம் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், கோடான கோடி தொண்டர்களின் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எதிரிகளும், துரோகிகளும் சூழ்ந்துகொண்டு அழித்துவிட திட்டமிடுகிறார்கள். பாவம் அவர்கள் பகல் கனவு காணுகிறார்கள். அம்மா என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாம், அவர்களை உறுதியுடன் எதிர்கொண்டு வீழ்த்தி வருகிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மா நம்மோடு நின்று நம்மை வழிநடத்துகிறது. மலைமலையான துயரங்கள், அலையலையாக வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறுகின்ற ஆற்றலை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.

சத்தியம் தோற்பதில்லை சத்தியம் தோற்பதில்லை! அறம் அழிவதில்லை அறம் அழிவதில்லை!! நாமும், நமது அனைத்துப் போராட்டங்களிலும் வெல்வோம்!!!

இன்றைக்கு தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற திமுக ஆட்சி, மக்களை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கிறது. மின் கட்டணம், சொத்து வரி, பால் பொருட்களின் விலை என சகலத்தையும் உயர்த்தி பொதுமக்கள் வாழ்வையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

நாட்டில் போதைப் பொருள் புழக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் தலைவிரித்து ஆடுகிறது; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இந்த அரசியல் சூழலில்தான், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை நாம் சந்திக்கின்றோம். எத்தனையோ மோசடிகளை, ஜனநாயகப் படுகொலைகளை ஆளும் திமுக அரசு அரங்கேற்றினாலும், மக்கள் நம்மோடு நிற்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். “நிழலின் அருமை வெயிலில் தெரியும்’’ என்பதைப் போல, தமிழக மக்கள் நமது ஆட்சி மீண்டும் மலர காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மக்கள் விரோத ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவும், புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் உயிர் போல் கட்டிக்காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர்கள் பாதையிலேயே வழிநடத்தவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் ஒருதாய்ப் பிள்ளைகளாய் நின்று நாம் அனைவரும் பாடுபடுவோம்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேரறிவிப்பு செய்ததைப் போல, இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழகம் வெற்றிநடை போட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளில் உறுதியேற்போம். இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழ் சரித்திரத்தின் ஏடுகளில் நீங்கா இடம்பெற்று நிலைத்திருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது கழக நிர்வாகிகள் மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், ஏழை- எளியோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கியும், கிராமம் முதல் மாநகரம் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றிச் சிறப்போடு கொண்டாட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்ததை விமர்சிக்கும் துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் நம் கழக கண்மணிகள் அயராது உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கான உறுதியை நாம் ஏற்கும் நாளாக இதயதெய்வம் அம்மாவின் பிறந்த நாள் அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.’ என  தெரிவித்துள்ளார்.