ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும், பத்மராஜன் என்பவர், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவருடைய 233வது வேட்புமனு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று  சேலம் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவரான பத்மராஜன் என்பவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.   233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  சேலம் மாவட்டம் மேட்டூர் எனது சொந்த ஊர். அங்கு டயர் பஞ்சர் கடை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். தேர்தல் விழிப்புணர்வுக்காக  முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.

இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி,  ஜெயலலிதா மட்டுமின்றி , தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.  நான் அதிக தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன் என்றவர், தற்போது,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். இது எனது 233 வேட்புமனு என்றும் கூறினார்.