சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோணமலையில் இருந்து 380 கீ. மீ. தொலைவில் வீசும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் வெளியாகியுள்ளது

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31.01.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து 01.02.2023 அன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.

இது இன்றுமாலை வரை மேற்கு திசையிலும் அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நாளை (1-ந்தேதி) தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

2-ந்தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் இன்று முதல் 2-ந்தேதி வரை வீசக்கூடும்.

எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.