ராமேஸ்வரம்: தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்கள் விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை கடற்படை யினரின் தொடரும் அடாவடி சம்பவங்கள் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு, கச்சத்தீவு அருகே, இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்து வருவது வாடிக்கையான நடவடிக்கை. ஆனால், இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், வலைகளை சேதபடுத்தும் நடவடிக்கைகளையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இதற்கு இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த  மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, அங்கு மீன்படித்துக்கொண்டிருந்த 22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் மடக்கி கைது செய்தனர்.  எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களும்,  காரைக்கால் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதுசெய்த மீனவர்களை இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுசென்று யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம், தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், அவர்களில், 21 மீனவர்களை மட்டும் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.