புதுடெல்லி: வரும் 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், மக்களின் வாழ்நிலை குறித்து விளக்கமான கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் பி.எச்டி., படித்தவரா? சட்டம் அல்லது மொழிப்பாடம் அல்லது பொறியியல் அல்லது பொருளாதாரம் படித்தவரா? இயற்கை சீற்றத்தின் காரணமாக உங்கள் சொந்த ஊரை விட்டு நீங்கி வேறிடத்தில் குடிபெயர்ந்தவரா? நரம்பியல் தொடர்பான நோய்களால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளீர்களா?

ஆம். இதுபோன்ற கேள்விகளை மக்கள்தொகை கணக்கெடுக்க வரும் அலுவலர்கள் உங்களிடம் கேட்க வாய்ப்புள்ளது. இந்தியர்களின் வாழியல் சூழல் எப்படி உள்ளது என்பது குறித்து தெளிவாக அறியவே, 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விரிவாக மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் பார்த்தால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட எந்த மக்கள்தொகை கணக்கெடுப்பையும்விட, இது விரிவானதாக இருக்கும். இத்தகைய விரிவான தகவல்களைப் பெறுவதன் மூலமாக, அரசின் கொள்கை முடிவுகளை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நுட்பமாக மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பான உத்தேச கேள்விகள் இறுதிசெய்யப்பட்டு வருகின்றன. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரும் சற்று விரிவான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், இந்தமுறை பகுதிகளாகப் பிரித்து இன்னும் விரிவாக கேட்கப்படவுள்ளது.