திருவனந்தபுரம்:

கேரளாவில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை நாடு முழுவதும் அதிகப்படியான வெப்ப நிலை பதிவாகும். இந்த ஆண்டு வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் சராசரி தட்ப வெட்ப நிலையை விட கூடுதலாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் 0.5 முதல் ஒரு டிகிரி செல்சியஸ் வரை உயரும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சுதேவன் கூறுகையில், ‘‘ இது சர்வதேச அளவிலான மாற்றமாகும். ஆண்டுதோறும் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதே அளவிலான தாக்கம் கேரளாவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2016ம் ஆண்டு வெப்பம் மிகு ந்த ஆண்டாக இருந்தது. இதை விட இந்த 2018ம் ஆண்டு அதிகமாக இருக்கும். பாலக்காடு ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸை எட்டிவிட்டது. இங்கு அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்த வரலாறு உள்ளது’’ என்றார்.

‘‘தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவின் தெற்கு பகுதி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 0.5 முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
வெப்பம் அதிகரிப்பு காரணமாக இது சார்ந்த நோய்கள் அதிகளவில் ஏற்படும். அதனால் கோடை காலத்தில் நம் உடல் நலத்தின் கவனம் செலுத்த வேண்டும்.

டெங்கு, காமாலை போன்ற நோய்ககள் வெப்பம் அதிகமானால் பரவும். கடந்த காலங்களில் இது போன்ற நோய் பரவிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிப்புறத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை மார்ச் முதல் மே மாதத்தில் மாற்றி அமைக்க கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்றார் சுதேவன்.

இந்த பணி நேரம் மதியம் 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் அதிகாலை 7 மணி வரை என மாற்றி அமைக்கும்படி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ‘‘கோடை காலத்தில் அதிக நீர் ஆகாரம் பருக வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளா கடற்கரை சார்ந்த பகுதியாகும். இங்கு அதிகளவில் சாலை கட்டுமான பணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் அளவு கண்டிப்பாக அதிகரிக்கும்’’ என்று சுதேவன் தெரிவித்துள்ளார்.