சட்டீஸ்கர்: பாஜ தலைவரின் பசு பாதுகாப்பகத்தில் பட்டினியால் 200 மாடுகள் பலி!!

ராஜ்பூர்:

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் பாஜ தலைவர் ஹரிஸ் வர்மா என்பவர் பசு பாதுகாப்பகத்தை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

பாதுகாப்பகத்தில் நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தீவனம் இன்றி பட்டினியாலும் மற்றும் சிகிச்சைக்கு மருந்துகள் இல்லாததாலும் 200 மாடுகள் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டினி காரணமாக 27 மாடுகள் இறந்துள்ளதை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால், கிராமத்தினர் இறந்த மாடுகளின் எண்ணிக்கை 200 வரை இருக்கும். அவை பாதுகாப்பகம் அருகில் புதைக்கப்பட்டுவிட்டது. புதைக்கட்டாமல் இருந்த மாடுகளை மட்டுமே அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

‘‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு பசு பாதுகாப்பகம் அருகே பொக்லைன் எந்திரம் செயல்பட்டு கொண்டிருந்தது. இது குறித்து சில மீடியாக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் சென்று பார்த்தபோது பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு அவற்றில் புதைப்பதற்காக பல மாடுகள் இறந்த நிலையில் தரையில் கிடந்தன. குறைந்தபட்சம் 200 மாடுகள் இருக்கும்’’ என கிராமத்தினர் தெரிவித்தனர்.

‘‘பட்டினி மற்றும் நோய்களுக்கு மருந்து இல்லாததால் மாடுகள் இறந்துள்ளன’’ என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ‘‘அங்குள்ள ஒரு சுவர் இடிந்து விழுந்ததால் மாடுகள் இறந்தன. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு வழங்க வேண்டிய நிதியுதவி வழங்கப்படவில்லை. இந்த பாதுகாப்பகம் மிகுந்த நெருக்கடியில் இருந்தது. 220 மாடுகள் இருக்க வேண்டிய இடத்தில் 650 மாடுகள் இருக்கிறது.

மாடுகளுக்கு தீவனம் வழங்க முடியவில்லை என்பதை பல முறை அரசுக்கு தெரிவித்தேன். பாதுகாப்பகத்திற்கு வர வேண்டிய சுமார் ரூ. 10 லட்சம் நிதியுதவி நிலுவையில் உள்ளது. ஆனால் அரசு வழங்கவில்லை. மாடுகள் இறந்துள்ளதால் கவலை ஏற்பட்டுள்ளது’’ என்று ஹரிஸ் வர்மா தெரிவித்தார்.

துர்க் மாவட்ட கால்நடை மருத்துவ துணை இயக்குனர் சாவ்லா கூறுகையில்,‘‘தீவனம் இல்லாத காரணத்தால் தான் மாடுகள் இறந்திருப்பது என்பது தற்போதைய சூழ்நிலையில் உறுதிபடுத்தப்ப்டடுள்ளது. இறந்த மாடுகளுக்கு கடந்த இரு தினங்களாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாடுகள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இது குறித்து மாவட்ட சப் கலெக்டர் ராஜேஷ் ராத்ரே கூறுகையில்,‘‘தீவனம் இல்லாமல் கடந்த சில தினங்களாக 200 மாடுகளுக்கு மேல் இறந்திருக்கும் என்று கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

உரிய புகார் அளித்த பின் பாஜ பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து சட்டீஸ்கர் பசு சேவா ஆயோக் செயலாளர் பனிகிரகி கூறுகையில், ‘‘பசு பாதுகாப்பகத்தில் விதிமீறல் இருந்தால் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு நிதியுதவியை மட்டும் நம்பி பசு பாதுகாப்பகத்தை செயல்படுத்த முடியாது’’ என்று தெரிவித்தார்.
English Summary
200 cows die of starvation at a shelter run by BJP leader in Chhattisgarh