நெல்லை: தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனை  20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் களுக்கு ஊக்கத் தொகை, மற்றும் கடன் உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் மனோ தங்கராஜ்,  பால் தேவை மக்கள் தொகைக்கு ஏற்ப நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டு பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.  விவசாயிகளின் அடிப்படை பிரச்சினையே அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கான அடிப்படை ஆதார விலையாகும்.

ஆவின் இருப்பதால் பாலுக்கு ஆண்டு முழுவதும் நிரந்தரமான ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பாலுக்கு வழங்கப்படும் அடிப்படை ஆதாரங்கள் கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலில் தரத்திற்கு ஏற்ப விலை வழங்குவதற்காகவே பால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே பகுப்பாய்வு செய்யப்படும் நடைமுறை விரைவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான கடனுக்கான வட்டி விகிதம் 16 சதவீதம் இருந்ததை 9 முதல் 8.5% வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் கூட்டுறவுத் துறையில் நட்டத்தில் இயங்கி வந்த பல ஒன்றியங்கள் இன்று லாபத்தில் இயங்குகின்றது. மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்றும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நெல்லை மற்றும் கன்னியாகுமரி பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 2302 பேருக்கு 1 கோடியே 37 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கும் தற்போது 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதனை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்து நாட்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தரமான பாலுக்கு 39 ரூபாய் வரை கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. சென்ற மாதம் முதல் ஆவின் பொருள் களுக்கு தமிழகத்தில் எங்கும் தட்டுப்பாடு இல்லை.

மேலும் பால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே பாலின் தரம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யும் திட்டம் தற்போது தமிழகத்தில் 50 சதவீதம் இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இது விரைவில் அமல்படுத்தப்படும்.

தற்போது ஆவினில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்த அவர் புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 300 புதிய கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியமர்த்தப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.